படம்: திரிசூலம்
இசை:எம்.எஸ்.வி.
குரல்: இயேசுதாஸ், வாணி ஜெய்ராம்
பாடல்: கண்ணதாசன்
திருமார்பில் முகம் புதைத்த காதல்
_________________________________
_________________________________
வீரப்பன் காட்டிற்குள் கடத்திச் சென்ற நடிகர் ராஜ்குமார் மற்றும் காஞ்சனா , ஜெய்மாலா ஆகியோர் நடித்த " சங்கர் குரு " என்ற கன்னட திரைப்படம் 1978 ல் வெளியாகி வெற்றி பெற்றதைத் தொடர்ந்து அதனைத் தமிழில் ரீ மேக் செய்ய எண்ணினார் இயக்குனர் கே. விஜயன்.
பெரிய பட்ஜெட்டில் தயாரான படத்திற்கு " திரிசூலம் " என பெயரிடப்பட்டது. இதில் சிவாஜி கணேசன் மூன்று வேடங்களில் தோன்ற கே.ஆர். விஜயா, ஸ்ரீபிரியா, ரீனா, புஸ்பலதா, நம்பியார், தேங்காய் சீனிவாசன், ஜெய்கணேஷ், வீ.கே. ராமசாமி மற்றும் பலர் நடித்தனர்.
இந்தத் திரைப்படம் 1979 ம் வருடம் திரைக்கு வந்தது. திரையிடப்பட்டதில் இருந்து இருநூறு நாட்களுக்கு மேல் ஓடி வசூலில் மிகப் பெரிய சாதனை படைத்தது. அந்த கால கட்டத்தில் தமிழ்நாட்டின் மொத்த சனத்தொகை 47 மில்லியன்களாக இருந்தபோது திரிசூலம் படத்திற்கு 30 மில்லியன் டிக்கட்டுகள் விற்கப்பட்டிருந்தன என்பது ஒரு வரலாற்றுச் சாதனைதான். அதேவேளை வசூலில் முதன்முதலாக ஐந்து கோடிகளைக் கடந்த தென்னிந்திய திரைப்படமாகவும் இது திகழ்கிறது.
கண்ணதாசன் பாடல்களை எழுத எம்.எஸ். விஸ்வநாதனின் இசையில் அனைத்தும் மிகப் பிரபலமாய் அமைந்தன. ரீ.எம். சௌந்தரராஜன், எஸ்.பி.பாலசுப்ரமணியம், கே.ஜே. ஜேசுதாஸ் மற்றும் வாணி ஜெயராம் ஆகியோர் பாடிய இப்படத்தின் எல்லாப் பாடல்களுமே செவிக்கு இனிமை சேர்த்தன.
ஜேசுதாஸ், வாணி ஆகியோர் பாடும் இப்பாடல் பசுமையான சூழலில் படமாக்கப்பட்டுள்ளது. சிவாஜியோடு மலையாள சினிமாவின் அழகு நாயகி ரீனா இதில் தோன்றுகிறார்.
திருமாலின் திரு மார்பில் ஸ்ரீதேவி முகமே
தீபங்கள் ஆராதனை ஊரெங்கும் பூ வாசனை
தீபங்கள் ஆராதனை ஊரெங்கும் பூ வாசனை
மலை மகள் சீராட்ட கலை மகள் பாராட்ட
செங்கனிச் சுவையோடு கதை பேசும் மன்றம்
கண்டேன் இங்கே கண் முன்னமே
சேர்ந்து பாடுங்கள்
தேடுங்கள் சுகங்களை
பொன்மணித் தேரல்லவா
செங்கனிச் சுவையோடு கதை பேசும் மன்றம்
கண்டேன் இங்கே கண் முன்னமே
சேர்ந்து பாடுங்கள்
தேடுங்கள் சுகங்களை
பொன்மணித் தேரல்லவா
திருமாலின். . . .
புது மலர் தாலாட்டு தழுவிடும் பூங்காற்று
மன்மதன் ரதிதேவி விளையாடும் கோலம்
நானும் நீயும் அவ்வண்ணமே
மாலை ராகத்தின் ஆனந்த மயக்கமே
மங்கலத் தேன் சிந்தவா
மன்மதன் ரதிதேவி விளையாடும் கோலம்
நானும் நீயும் அவ்வண்ணமே
மாலை ராகத்தின் ஆனந்த மயக்கமே
மங்கலத் தேன் சிந்தவா
திருமாலின். . .
பாலெனும் நீரோடை படகுகள் பொன்னாடை
பஞ்சணை சுகம் காட்டும் பனி மேடை வண்ணம்
ஆடல் பாடல் என் எண்ணமே
நேரம் காலங்கள் ஏன் இந்த இடத்திலே
சித்திரப் பூச்சூட்டவா
பஞ்சணை சுகம் காட்டும் பனி மேடை வண்ணம்
ஆடல் பாடல் என் எண்ணமே
நேரம் காலங்கள் ஏன் இந்த இடத்திலே
சித்திரப் பூச்சூட்டவா
திருமாலின். . .
No comments:
Post a Comment