Saturday, June 4, 2016

KADHALIN PON VEEDHIYIL - POOKKARI



படம்: பூக்காரி
இசை: எம்.எஸ்.வி.
குரல்: டி.எம்.எஸ்., எஸ்.ஜானகி
பாடல்: பஞ்சு அருணாசலம்


காதலின் பொன் வீதியில்
காதலன் பண்பாடினான்
பண்ணோடு அருகே வந்தேன் நான்
கண்ணோடு உறவுகொண்டேன்

காதலின் பொன் வீதியில்
நானோரு பண்பாடினேன்
பண்ணோடு ஒருத்தி வந்தாள்
என் கண்ணோடு ஒருத்தி வந்தாள்

திருப்பாற்கடலில் பொன் மேடையிட்டு
நான் காத்திருப்பேன் உனக்காக
இனி தனிமையில்லை பகல் இரவுமில்லை
நாம் வாழ்ந்திருப்போம் இனிதாக

இரு பொன் மலரில் ஒன்று என் மலராம்
தேன் கொள்ள வந்தேன் மனம்போல
என் மனதினிலே உன் நினைவுகளே
அதை அள்ளி வந்தேன் உனக்காக
காதலின் பொன் வீதியில்...

விழி ஓரங்களில் சில நேரங்களில்
வரும் பாவங்களும் கவியாகும்
அந்தக் கவிதைகளில் உள்ள பொருளறிந்து
அதை சுவைப்பதுதான் கலையா...கும்

அந்தக் கலைகளிலும் பல புதுமை உண்டு
அதைப் பழகுவதே பேரின்பம்
இன்ப வாசலிலே ஒரு காவல் இல்லை
இனி காலம் எல்லாம் உன் சொந்தம் !

காதலின் பொன் வீ...தியில் காதலன் பண்பா...டினான் ..



Tiruchendurai Ramamurthy Sankar  writes :

காதலின் பொன்வீதியில் ( பூக்காரி)
பூக்காரி (1973) , மு.க.முத்துவின் மாக்னம் ஹோப்லஸ் படங்களில் ஒன்று. பிள்ளையோ பிள்ளையில் (1972) அறிமுகமான மு.க.முத்து , எம்.ஜி.ஆர் விக்குடன் தமிழ் சினிமாவிற்கு சொல்லொணாத் துன்பங்கள் கொடுக்கத் துவங்கியிருந்தார். ஒரு புறம் கலைஞர் கண்ணொளித் திட்டம் வழங்கிக்கொண்டிருக்கும்போது மறுபுறம் இந்தக் கொடுமை நிகழ்ந்துகொண்டிருந்தது. எமர்ஜென்சியினால் இந்தியாவிற்கு ஏற்பட்ட ஒரே நன்மை மு.க.முத்துவின் திரைக்காவியங்கள் வருவது நின்றது. பிள்ளையோ பிள்ளை, சமையல்காரன், பூக்காரி, அணையாவிளக்கு, இங்கேயும் மனிதர்கள் என்று அடித்த புயல் நின்றது. மறுமுறை அவர் இராம.நாராயணனின் , வீரன் வேலுத்தம்பி, SA ராஜ்குமார் இடையில் படத்தில் " சுருளு மீசைக்காரனடி" என்று பந்தா தம்பி ராம்கியைப் புகழ்ந்து பாடும்போது தமிழ்சினிமா அவரை இனிதே மறந்திருந்தது.

வெண்ணிற ஆடை நிர்மலா ஒரு புரியாத புதிர். ஜெயலலிதா, மூர்த்தி, ஶ்ரீகாந்த்துடன் அறிமுகமாகி, மன்னிப்பு போன்ற படங்களில் சுமாராக நடித்தும் , பெண் சரத்பாபு போல்( பல படங்களில் நடித்தும் ) யாதொரு தடத்தையும் விட்டுச்செல்லாதவர். 70 களில் பிரபலமான பிரமீளா, ஜெயசித்ரா, மஞ்சுளா போன்றவர்களைவிட நல்ல தோற்றத்தையும், நடிப்பையும் , நடனத்தையும், கொண்டிருந்தும், அவர் கண்ணில் தென்படாத ஒன்று ......கான்ஃபிடென்ஸ். இதயக்கனியில் ப்ரப்பிரம்மமாக நிற்கும் ராதா சலூஜாவின் கண்களில் தென்படும் கான்ஃபிடென்ஸ் கூட " தொட்ட இடம் எல்லாம்" பாட்டில் நிர்மலாவிடம் இருக்காது. அவர் எம்.எல்.சி பதவி பெறாததற்கு இது காரணமில்லை எனினும்.
அமிர்தம், கிருஷ்ணன்-பஞ்சு போன்ற கழக விசுவாசிகள் கைவண்ணத்தில் உருவான பூக்காரி....மஞ்சுளா பூக்காரி! இந்தப் படத்திற்கு " கைவண்டி இழுக்கும் அப்பாவையும், சினிமாப் பைத்திய தங்கையும் காப்பாற்றும் இளைஞன்" என்று பெயர் வைத்திருந்தாலும். வித்தியாசம் இருந்திருக்காது. பின்னாளில் டார்லிங் டார்லிங் டார்லிங் பாட்டில் ஶ்ரீதேவியுடன் வந்த கன்னட அம்பரீஷ், வில்லன்! அதேபோல் ஜெயசித்ரா பின்னாளில் சினிமா பைத்தியம் படத்திலும் நடித்தது ஒரு பைத்தியக்கார சிறப்பு.
.......................................................
குமுதம் லைட்ஸ் ஆனில் எம்.எஸ்.வி பற்றி சொல்லும்போது " எம்ஜியாருக்கும் வேண்டியவர், சிவாஜிக்கும் வேண்டியவர், கலைஞருக்கும் வேண்டியவர் என்றால் கோடம்பாக்கத்தில் எம்.எஸ்.விதான்" என்று எழுதியிருப்பார் ரா.கி.ர. அதே 1973 ல் பூக்காரியும், உலகம் சுற்றும் வாலிபனும், பொன்னூஞ்சலும் !
முத்துப்பல் சிரிப்பென்னவோ ( TMS-PS) , முப்பது பைசா மூணு முழம் ( LRE) மற்ற பாடல்கள்.
இந்தப்பாடல் TMS-SJ வின் டூயட்டில் நீல நிறம் ( என் அண்ணன்) மிகச்சிறந்த இரண்டாவது பாடல். ஆனால் இந்தப்பாடல் , கிலோமீட்டர் கணக்கில் முதல் பாடல். பஞ்சு அருணாசலத்தின் வரிகள். கண்ணை மூடிக்கொண்டு கேட்கவேண்டிய பாடல்களிலும் தலையாயது இதுவே. அபாரமான வயலின், ஹம்மிங்!
" விழி ஓரங்களில் சில நேரங்களில் வரும் பாவங்களும்" என்று அந்தக்காட்சியில் நடிகர்கள் இருவரிடமும் இல்லாத ஒன்றைப்பற்றி எழுத ஒரு மனோதிடம் வேண்டும்.
TMS குரலின் ஒரு சேர வெளிப்படும் ஒரு கம்பீரமும் காதலின் மென்மையும் , ஜானகியின் குரலில் வெளிப்படும் நாணமும் இந்தப்பாடலை மறக்கமுடியாத பாடல் ஆக்கியுள்ளது.
கண்ணை மூடிக்கொண்டு கேட்கவும்!

https://www.facebook.com/groups/1018417744856618/permalink/1246478088717248/

No comments:

Post a Comment