Sunday, July 31, 2016

INRU VANDHA SONDHAMA - CHITHRANGI 1964



படம்: சித்ராங்கி
குரல்: TMS, பி.சுசீலா
இசை: வேதா
பாடல்: வாலி / கு.மா.பாலசுப்ரமணியம்



இன்று வந்த சொந்தமா
இடையில் வந்த பந்தமா
தொன்று பல ஜென்மமாய்
தொடர்ந்து வரும் இன்பமே

வெண்ணையை அள்ளி உண்டு
வேங்குழல் ஊதி நின்று
கண்ணனாக நீ இருந்த காலத்திலே
என்னையே கொள்ளை கொண்ட
புன்னகை வீசி நின்ற
கன்னிகை ராதையாக
தேடி வந்தாய்
குயில் இசையும்
குழல் இசையும்
குழைந்திடும் வேளையிலே
அன்பில் மிதந்து தன்னை மறந்து
அகம் மகிழ்ந்தாடியது


இன்று வந்த சொந்தமா


கணையாழி கையில் தந்து
துஷ்யந்தனாக வந்து
காதல் மணம் புரிந்த காலத்திலே
மானோடு நீ வளர்ந்து
சகுந்தலையாய்  இருந்து
மாறாத அன்பு கொண்டு
மாலையிட்டாய்.
குளிர் நிலவும் மலர் மணமும்
குலாவிடும் சோலையிலே
அன்பில் மிதந்து தன்னை மறந்து
அகம் மகிழ்ந்தாடியது

இன்று வந்த சொந்தமா
இடையில் வந்த பந்தமா
தொன்று பல ஜென்மமாய்
தொடர்ந்து வரும் இன்பமே

இன்று வந்த சொந்தமா....


இன்று வந்த சொந்தமா  என்ற சித்ராங்கி திரைப்படப் பாடல் 2 ஹிந்தி பாடல்களின் கலவை.. மிக அழகாக இரண்டையும் இணைத்திருப்பார் வேதா.. பல்லவி 'யே நயி நயி' என்ற பாக்கட் மார் படத்துப் பாடலில் இருந்தும், சரணங்களை 'நா தும் ஹமே ஜானோ ' என்ற பாத் ஏக் ராத் கி என்ற படத்துப் பாடலில் இருந்தும் எடுத்து இணைத்திருப்பார்.. இரண்டும் தேவ் ஆனந்த் படங்கள்..
https://www.youtube.com/watch?v=6jVdfGM6Kss

https://www.youtube.com/watch?v=hGOkuBTtBu0

தமிழ்த் திரை இசையின் பிதா மகர்கள் - 11 - வேதா
முழுப் பெயர் வேதாசலம். வேதாவின் பெற்றோர்கள் தென் ஆப்பிரிக்காவில் இருந்தார்கள். இந்தியாவிலேயே தன மாமாவின் வீட்டில் தங்கிப் படித்து வந்தார் வேதா. சிறுவயதிலேயே இசையின் மீது ஈடுபாடு உண்டாயிற்று. வேதாவின் மாமாவிற்கு இசையில் மிகுந்த ஆர்வம் இருந்தது. அவர் வேதாவிற்கு கர்நாடக சங்கீதம் சொல்லிக் கொடுத்தார்.
ஒரு நாள் ப்ரொபஸர் காப்ரியல் அவர்களின் இசை நிகழ்ச்சியைக் காண நேர்ந்தது. அவரது இசையினால் பெரிதும் கவரப்பட்ட வேதா, தானும் ஒரு இசையமைப்பாளராக வேண்டும் என்று உறுதி பூண்டார். தன்னை காப்ரியலிடம் அறிமுகப் படுத்திக்கொண்டு அவரிடம் ஹிந்துதானி இசை பயில ஆரம்பித்தார். ஏற்கெனவே வேதாவிற்கு பங்கஜ் மல்லிக், சைகல் போன்றோரின் பாடல்களில் மிகுந்த ஈடுபாடு உண்டு.
அந்நாளில் வெங்கடாசலம் என்பவரதுவீட்டில் கலைஞர்கள் ஒன்று கூடி இசை நிகழ்ச்சிகள் நடத்துவது வ ழக்கம். இது போன்ற ஒரு நிகழ்ச்சியில் வெங்கடாச்சலத்தின் நண்பரான இசை அமைப்பாளர் சி பாண்டுரங்கனை வேதா சந்தித்தார். அவருடன் சில காலம் பணி புரிந்தார். போதிய அளவு வாய்ப்புகளும் வருமானமும் இல்லாமல் போகவே அவரிடமிருந்து விலகினார். நடிகை வைஜயந்திமாலா நடத்திவந்த நாடகக் குழுவில் சில காலம் ஹார்மோனியம் வாசித்து வந்தார்.
50களில் சில படங்களில் முக்கிய வேடங்களில் நடித்து வந்தவர் நடிகர் ஸ்ரீராம். அவர் மூலம் சிங்களப் படத் தயாரிப்பாளர்களான ஜெயமனே சகோதரர்களின் அறிமுகம் வேதாவிற்கு கிடைத்தது. "மாறும் விதி என்ற சிங்களப் படத்திற்கு வேதா இசை அமைத்தார். அந்தப் படம் வேதாவின் வாழ்க்கையையே மாற்றிவிட்டது.
அந்தப் படம் மகத்தான வெற்றி கண்டது. பின்னர் ஜெயமனே சகோதரர்கள் தயாரித்த பத்து படங்களுக்கு வரிசையாக வேதான் இசை அமைப்பாளர். இதில் ஒரு படம் இலங்கையில் வெள்ளிவிழா கண்டது.
வேதாவிற்கு தமிழில் வந்த முதல் வாய்ப்பு, ஜூபிலி ஃபிலிம்ஸின் "மர்ம வீரன்". இதுவும் நடிகர் ஸ்ரீராமின் உதவியால் வந்த வாய்ப்பு ஆகும். இப்படத்தில் ஸ்ரீராமும் வைஜயந்திமாலாவும் இணைந்து நடித்திருந்தனர். இப்படத்தில் 10 பாடல்கள் இடம் பெற்றன. சந்திரபாபுவும் ஒரு பாடல் பாடியுள்ளார்.
அடுத்து எஸ் எஸ் ராஜேந்திரன், பண்டரிபாய், டி ஆர் ராமச்சந்திரன், பாலாஜி, எஸ் வி ரங்காராவ், தேவிகா ஆகியோர் நடித்த அன்பு எங்கே படத்திற்கு இசை அமைத்தார் வேதா. இதில் சிங்கள பைலா பாணியில் இவர் இசையமைத்த "டிங்கிரி டிங்காலே மீனாக்ஷி டிங்கிரி டிங்காலே என்ற பாடல் மிகவும் புகழ் பெற்றது. இதே படத்தில் கவ்வாலி பாணியில் "நயா தௌர்" என்ற படத்தில் இடம் பெற்ற பிரபல ஹிந்திப் பாடலான "ரேஷ்மி சல்வார் குர்தா ஜாலி கா" என்ற பாடலின் மெட்டில் "அமிர்த யோகம் வெள்ளிக்கிழமை கண்ணாளா" என்ற பாடலும் பெருத்த வரவேற்பை பெற்றது.
அடுத்து நடிகர் ஸ்ரீராம் ஜெமினி சாவித்திரி இவர்களை வைத்து தயாரித்த "மணமாலை" படத்திற்கு இசையமைத்தார் வேதா. இப்படத்தின் P B ஸ்ரீனிவாஸ் குரலில் "நெஞ்சம் அலைமோதவே, கண்ணும் குளமாகவே கொஞ்சும் கண்ணைப் பிரிந்தே போகிறாள், ராதை கண்ணனைப் பிரிந்தே போகிறாள்போகிறாள்" என்ற பாடல் மிகவும் பிரபலம்.
அடுத்து "மின்னல் வீரன்" என்ற படம். ஏ எல் நாராயணன் கதை வசனம் எழுதி நான்கு பாடல்களையும் எழுதியிருந்தார். சில தோல்விப் படங்களின் பாடல்களும் காணாது போய்விடுவதுபோல் இப்படத்தின் பாடல்களும் காணாது போயின. "கனியே, கண்ணான செல்வமே, தாலேலோ" என்று P B ஸ்ரீனிவாஸ் பாடிய பாடலும் அது போல காணாது ,போய்விட்டது. "காலையிலே வலைஎடுத்து கால் வாயிற்று கஞ்சிக்காக நாள் நாள் முழுதும் பாடுபடும் தொழிலாளி" என்ற பாடலும் அவ்வாறேதான். கரைமேல் பிறக்க வைத்தான் என்பது போல் இதுவும் ஒரு மீனவப் பாடல்தான். இன்னொரு பாடல் "கண்ணோடு கண்ணினை நோக்கின்" என்ற ஜெயலக்ஷ்மி (ராதா) பாடும் பாடல். சுத்தமான கரகரப்பிரியா இராகத்தில் அமைந்தது. ஏ எல் நாராயணின் இலக்கிய மணம் மிக்க வரிகளுக்கு ஏற்றதொரு இசையை வழங்கியிருந்தார் வேதா
(நான் இவ்வளவு விரிவாக எழுதவற்கு காரணம், வேதா என்றாலே ஹிந்திப் பட மெட்டுக்களை காப்பி அடிப்பவர் என்ற ஒரு கருத்து நிலவுவதுதான். அவர் தயாரிப்பாளர்களின் நிர்ப்பந்தால்தான் அவ்வாறு செய்ய நேர்ந்தது - குறிப்பாக மாடர்ன் தியேட்டார்ஸ் சுந்தரம். வேதா அனைத்து இசை வடிவங்களிலும் தேர்ச்சி பெற்றவர்.)
வேதாவின் CLASSICAL பரிமாணத்தை காட்ட வந்த படம் பார்த்திபன் கனவு. கல்கி அவர்களின் சரித்திர நவீனத்திற்கு உயிரோட்டம் அளிப்பதுபோல் அமைந்தது வேதாவின் இசை. "கண்ணாலே நான் கண்ட கணமே (மருதகாசி), பழகும் தமிழே பார்த்திபன் மகனே (கவியரசர்) இதயவானின் உதய நிலவே (விந்தன்), போன்ற மனதை மயக்கும் மெல்லிசைப் பாடல்கள் , பின்பு அந்தி மயங்குதடி என்று கல்யாணி ராகத்தில் பாரம்பரிய இசை (எம் எல் வசந்தகுமாரி) என்று ஒரு இசை விருந்தே படைத்திருப்பார் வேதா. அந்தி மயங்குதடியில் இராகத்தின் விலாசங்களைக் காட்ட சிதார் சதிராடும். இதய வானின் பாடலில் வயலின்களின் மேற்கத்திய தாக்கத்தை நாம் உணரலாம். இப்படத்தின் பாடல்கள் சாகாவரம் பெற்றவை.
1963ல் வேதாவிற்கு மாடர்ன் தியேட்டர்ஸின் அறிமுகம்அறிமுகம் கிடைத்தது. மனோரமா கதாநாயகியாக நடித்த கொஞ்சும் குமரி என்ற படத்திற்கு இசையமைத்தார். ஏசுதாஸ் முதல் முதலில் பாடிய படம் இதுதான், "ஆசை வந்த பின்னே, அருகில் வந்த கண்ணே" என்ற பாடலை பாடினர் (எஸ் பாலசந்தர் இசையில் பொம்மை படத்தில் இவர் பாடிய நீயும் பொம்மை 1964 ஆம் வெளி வந்தது)
அடுத்து இவர் இசை அமைத்த படம் "பாசமும் நேசமும்" என்ற ஜெமினிகணேசன், சரோஜா தேவி நடித்த படம், ஹிந்திப் படம் அனாரி யின்யின் தழுவல் இது.
அடுத்து வீராங்கனை, சித்ராங்கி படங்களுக்கு இசையமைத்தார். வீராங்கனையில் ஜேசுதாசிற்கு மூன்று பாடல்கள்.இதில் "நீலவண்ணக் கண்களிரண்டில்" என்ற பாடல் இன்றும் பிரபலம். சித்ராங்கி படத்தில் "நெஞ்சினிலே நினைவு முகம்" "இன்று வந்த சொந்தமா" போன்ற பாடல்கள் பெரும் வரவேற்பைப் பெற்றன.
பாடல்கள் பிரபலமானாலும் படங்கள் வெற்றியடைந்தால்தான் அடுத்தடுத்து வாய்ப்புகள் குவியும். சில படங்கள் வெற்றி பெறாததால் இவர் மாடர்ன் தியேட்டர்சுக்கு ஹிந்திப் படங்களின் ரீமேக்குக்கு போய்விட்டார். இவர் ஹிநதிப் பாடல்களைத் தழுவி மெட்டமைத்தாலும் பாடல்வரிகள் ஏனோ தானோ என்று இல்லாமல் பார்த்துக் கொண்டார். இவரது பாடல்கள் அனைத்தும் புகழ்பெற்ற பாடல் ஆசிரியர்கள் எழுதியதாகவே இருந்தது,உதாரணம் கண்ணதாசன். (நூறு முறை பிறந்தாலும்).
இந்த ஹிந்திப் பாடல் வரிசைப் படங்கள் வருமுன் மாடர்ன் தியேட்டர்ஸ் தயாரித்த ஒரு படம் அம்மா எங்கே (1964) அதில் "பாப்பா பாப்பாபாப்பா கதை கேளு" என்று காக்கா நரியின் கதையை அழகான ஆங்கில மெட்டில் நமக்கு அளித்திருந்தார் வேதா
அடுத்து சரசா பி ஏ என்றொரு படம். P B ஸ்ரீனிவாசின் குரலில் "இரவின் மடியில் உலகம் உறங்கும்" என்று நிமதியின்மையை மௌனமாகப் பொழியும் பாடல். பானுமதி பாடும் "மனதில் மனதை வைத்த பினாலே" என்ற பாடல்பாடல் எடுத்த எடுப்பிலேயே மனத்தைக் கவர்ந்துகவர்ந்து விடுகிறது.
வல்லவன் வரிசை: ஹிந்தியில் வந்த உஸ்தாத் படங்கள் மாடர்ன் தியேட்டர்ஸில் வல்லவன் வரிசை என்றானது.
"நூறு முறை பிறந்தாலும் நூறு முறை இறந்தாலும்
உனைப் பிரிந்து ஒரு நாளும் போவதில்லை"
"சௌ பார் ஜனம் லேங்கே, சௌ பார் ஃபனா ஹோங்கே" என்ற வரிகளை தமிழில் கவியரசர் இவ்வாறு எழுதினார். இந்தப் பாடல் பெரிய வெற்றியைப் பெற்றது, இந்தப் பாடல் மட்டுமல்ல, இப்படத்தின் பாடல்கள் அனைத்துமே பெரு வெற்றியைப் பெற்றன. "மனம் என்னும் மேலே" "பாரடி கண்ணே கொஞ்சம்" என்ற கவ்வாலி வகைப் பாடல், "கண்டாலும் கண்டேனே உன் போலே" "நெஞ்சுக்கு நிம்மதி"ஆகிய பாடல்கள்.
அடுத்து வல்லவன் ஒருவன். "பளிங்கினால் ஒரு மாளிகை" "தொட்டு தொட்டுப் பாடவா" "காவிரிக் கரையின் தோட்டத்திலே" ஆகிய பாடல்கள் பெரும் வெற்றி. - வேதா கவியரசர் கூட்டணி நன்முத்துகளை அளித்தது.
அடுத்து நானே வருவேன் - இதைப் பற்றி சொல்ல வேண்டிய அவசியமில்லை. ஹிந்தியில் "ரிம் ஜிம் ரிம் ஜிம்" என்று வந்ததை கவியரசர், சிறிதும் யோசிக்காமல், இங்கும் அங்கும் என்று அதைப் போன்றே ஒலிக்குமாறு எழுதினார். ஒரு திகில் பாடலான இது பெரும் வெற்றி ,பெற்றது. இப்படத்தின் மற்ற பாடல்களும் பிரபலம். "உன் வேதனையில் என் கண்ணிரண்டும் மயங்குவதேன் கண்ணா" இசையும், பாடல் .வரிகளும் மிகவும் அற்புதம்.
அடுத்து எதிரிகள், ஜாக்கிரதை - நேருக்கு நேர் நின்று பாருங்கள் போதும்
காதலித்தால் போதுமா - கொஞ்சம் நில்லடி என் கண்ணே
சி ஐ டி சங்கர் - நாணத்தாலே கண்கள் மின்ன மின்ன
ஜஸ்டிஸ் விஸ்வநாதன் - இது நீரோடு செல்கின்ற ஓடம், சிலை ,கைகள் உண்டு, கண்வழியே கண்வழியே போனது கிளியே
என்று வெற்றிப் பாடல்கள் தந்தார்.
நேரமும் தக்க சுதந்திரமும் இருந்தால் அட்டகாசமான துள்ளல் பாடல்களை தன்னாலும் அளிக்க முடியும் என்று இவர் நிரூபித்த படம் அதே கண்கள். இந்தப் படத்தில் "பூம் பூம் மாட்டுக்காரன் தெருவில் வராண்டி" "லவ், லவ் எத்தனை அழகு இருபது வயதினிலே" என்று கலக்கல் பாடல்கள் தந்தார். இது ஒரு மர்மங்கள் நிறைந்த திகில் படம். அதற்கேற்ப "வா அருகில் வா, தா உயிரைத் தா" என்றொரு பாடலும் வடித்தார்.
சின்னஞ்சிறு உலகம் என்றொரு படம், நாகேஷ் கதாநாயகன். "இவ்வளவுதான் உலகம் இவ்வளவுதான்" "ஊத்திக் கொடுத்தாண்டி ஒரு ரவுண்டு" என்ற பாடல்களை அளித்தார். சினிமாவை கேலி செய்யும் விதமாக எடுக்கப்பட்ட "நான்கு கில்லாடிகள்" படத்தில், செவ்வானத்தில் ஒரு நட்சத்திரம்" என்றொரு மெலடி, நெஞ்சுக்கு நிம்மதி ஆண்டவன் சன்னதி என்றொரு அமைதிப் பாடல் ஆகியவற்றை வழங்கினார்.
காப்பி அடிப்பதற்கென்றே ஒரு இசையமைப்பாளர் என்ற பெயர் வேதாவிற்கு ஏற்ப்பட்டது துர்பாக்கியமே. ஆனால் அதையும் ஒரு கடமையாக செய்து வந்தார். இவரது திறமைக்கு பார்த்திபன் கனவு ஒன்றே போதும். ஹிந்திப் படங்களின் பாடல்களை தமிழில் வெற்றிகரமாக உலவ விடுவதில் தான் வல்லவனுக்கு வல்லவன் என்று காட்டினார். "ஓராயிரம் பார்வையிலே" "நாணத்தாலே கண்கள் மின்ன மின்ன" பாடல்கள் இரவல் மெட்டுக்கள் போன்றா தோன்றுகின்றன?
இவர் இசையமைத்த கடைசிப் படம் "ஜஸ்டிஸ் விஸ்வநாத்" 1971.
மிக இளவயதிலேயே மரணமடைந்தார். ஆனாலும் அவர் விட்டுச்சென்ற பாடல்கள் இன்றளவும் நம் மனதை மகிழ்வித்துக் கொண்டிருக்கின்றன
(நன்றி: திரு வாமனன் அவர்கள்)

1 comment:

  1. அருமையான பதிவு. இசை அமைப்பாளர் வேதாவின் ஒரிஜினல் மெட்டுக்களை எடுத்துக் காட்டியதற்கு உங்களுக்கு கோடானு கோடி நன்றிகள்.

    வல்லவனுக்கு வல்லவன் படப்பாடல்கள் வரிசையில் "நெஞ்சுக்கு நிம்மதி" என்று கொடுக்கப் பட்டிருப்பது உண்மையில் "பொழுதும் விடியும்" என்று இருக்க வேண்டும். நான்கு கில்லாடிகள் படத்தின் நெஞ்சுக்கு நிம்மதி பாடலின் மெட்டும் இதை ஒட்டி இருப்பதால் இந்த குழப்பம் ஏற்பட்டு இருக்கலாம்.

    அதே போல நாகேஷ் நடித்த் படம் "உலகம் இவ்வளவுதான்". அது சின்னஞ்சிறு உலகம் என்று பதிவாகி விட்டது.

    ReplyDelete