படம்: தெய்வீக ராகங்கள்
பாடல்: கண்ணதாசன்
இசை: MSV
குரல்: வாணி ஜெயராம்
கங்கா யமுனா சரஸ்வதி..
கங்கா யமுனா சரஸ்வதி..
நீங்கள் குளித்த மூன்று நதி
கடலினில் விழும்முன்
புனிதத்தை இழந்தது
காரணம் உங்கள் தீய மதி
ஆயிரம் கவிதைகள் பாடி - என்
அங்கங்களில் விளையாடி
தேய்கின்ற பிறையென மாற்றி
கற்பு தீபத்தை அணைத்தாய் நீரூற்றி
இல்லறம் என்றது நல்லறம் என்றிவள்
எண்ணியிருந்தது கண்ணியமற்றது
என்றாயே என் மன்னவா
இன்னொரு பெண்ணிடம் ஆசை வளர்த்தவன்
நல்லவன் போலொரு நாடகம் இட்டவன்
என் வாழ்வில் நீயல்லவா…என் வாழ்வில் நீயல்லவா
கங்கா யமுனா சரஸ்வதி நீங்கள் குளித்த மூன்று நதி
கடலினில் விழும்முன் புனிதத்தை இழந்தது
காரணம் உங்கள் தீய மதி
தாமரைப்பூவினை நாடி சொன்ன சத்திய வார்த்தைகள் கோடி
தாமரைப்பூவினை நாடி சொன்ன சத்திய வார்த்தைகள் கோடி
காமனைப்போல் உறவாடி இன்று கலங்க வைத்தாயே வாடி
ரம்பை திலோத்தமை ஊர்வசி என்றெனை நம்பவும் வைத்தனை
நன்றி இழந்தனை என் வாழ்வு சோகமன்றோ
நல்ல குலத்தினில் வந்து பிறந்தவள்
உன்னை நினைத்தவள் தன்னை மறந்தவள்
தெய்வீக ராகமன்றோ…தெய்வீக ராகமன்றோ
கங்கா யமுனா சரஸ்வதி நீங்கள் குளித்த மூன்று நதி
கடலினில் விழும்முன் புனிதத்தை இழந்தது
காரணம் உங்கள் தீய மதி
ஆலிலை மேகலைப்பாட்டு நான் ஆனந்தமடைந்தேன் கேட்டு
ஆலிலை மேகலைப்பாட்டு நான் ஆனந்தமடைந்தேன் கேட்டு
காலத்தில் அருந்திய விருந்து பின் கசந்ததுவோ சுகம் மறந்து
சொர்க்கம் இருப்பதை கண்டுபிடித்திட பக்கம் இருந்தொரு
பாடம் உரைத்தனை அப்போது அறிவில்லையே
அந்த சுகத்தினை நெஞ்சு நினைத்தது
வந்த இடத்தினில் கண்டுபிடித்தது
இப்போதும் விடவில்லையே…இப்போதும் விடவில்லையே
கங்கா யமுனா சரஸ்வதி நீங்கள் குளித்த மூன்று நதி
கடலினில் விழும்முன் புனிதத்தை இழந்தது
காரணம் உங்கள் தீய மதி
http://www.dinamalarnellai.com/web/news/26542
சிரிப்பு நடிகர்கள் வந்தார்கள் போனார்கள்; சிரித்துக்கொண்டே இருந்தார் ஏ.வீரப்பன்!
ஒவ்வொரு காலத்திலும் சினிமாவில் சில சிரிப்பு நடிகர்களின் காட்டிலே மழை பெய்வது வழக்கம். ஒரு காலகட்டத்தில் என்.எஸ்.கிருஷ்ணன் கொடி கட்டிப்பறந்தார். பிறகு ஏ.கருணாநிதியும் தங்கவேலுவும் சந்திரபாபுவும் வலம் வந்தார்கள்.
எல்லோரையும் பின்னுக்குத் தள்ளிவிட்டு, தலைமை பீடத்தில் அமர்ந்தார் நாகேஷ். அரசியல் அதிர்வேட்டுகளை ஹாஸ்யம் ஆக்கினார் சோ. தேங்காய் சீனிவாசன், சுருளிராஜன், கவுண்டமணி, செந்தில், ஜனகராஜ், விவேக், வடிவேலு என்று காலத்திற்கு காலம், முன்னணி சிரிப்பு நடிகர்கள் மாறுபட்டார்கள்.
இப்படி ஊர்வலம்போன நகைச்சுவை நட்சத்திரங்களுக்கு இடையே, நாகேஷ் காலம் தொடங்கி நாற்பது வருடங்களுக்கு மேல் காமெடி ‘டிராக்’ எழுதி பல சிரிப்பு நடிகர்களுக்கு அஸ்திவாரமாக இருந்தவர் ஒரே ஒருவர் -- ஏ.வீரப்பன்.
நாடகத்துறையில் புடம்போடப்பட்ட நடிகரான வீரப்பன், யதார்த்தமான, அளவான நடிப்பை காட்டக்கூடியவர். சிரிப்பு நடிகராகவும் சில படங்களில் கவனத்தைக் கவர்ந்தவர் (உதாரணமாக, யார் நீ).
பொதுவாக, இரட்டை அர்த்தம், ஆபாசம் என்பதையெல்லாம் தவிர்த்து, பல படங்களில் வீரப்பன் நகைச்சுவை காட்சிகள் எழுதினார். சிரிப்புடன் சிந்தனையைத் தூண்டக்கூடியவர் என்ற பெயர் அவருக்கு வந்தது. சின்ன கலைவாணர் என்றுகூட ஒரு சிலர் புகழ்ந்தார்கள்.
'ஞான பீடம்' வென்ற ஜெயகாந்தன் முதல், ஞானம் என்ன விலை என்றுகேட்கும் பாமரன் வரை பலரையும் கவர்ந்த வீரப்பன், பள்ளியில் ஆனா ஆவன்னா கூட படிக்காதவர்!
தஞ்சை மாவட்டத்தில் ஆவணம் என்ற கிராமத்தில் விவசாய குடும்பத்தில் பிறந்தார். பிறந்த தேதி 28.6.1934. ‘நான் வளர்ந்த காலத்திலே கிராமத்தில ஒன்றுமே இல்லை’ என்பார் வீரப்பன். பள்ளிக்குப் போகவேண்டிய கஷ்டமெல்லாம் அவருக்கு ஏற்படவில்லை.
ராமநாத தேவர் என்ற ஊர்க்காரர், ஒரு நாள் கிராமபோன் கருவி வாங்கிக்கொண்டு வந்தார். 'மீரா' படத்திற்காக எம்.எஸ். சுப்புலட்சுமி பாடிய ‘காற்றினிலே வரும் கீதம்’ பாடலின் இனிய சுரங்கள், கிராமபோன் கூம்பிலிருந்து ஆவணம் கிராமத்தின் காற்றில் கலந்தன. ஊர்க்காரர்களுக்கு அதிசயமாக இருந்தது.
வயற்காட்டின் ஓரம் ஒரு சின்ன குடிசை அமைக்கப்பட்டு அதில் அமர்ந்து பயிரைக் காத்துக்கொண்டிருந்தார் வீரப்பன். அப்போது கிராமபோன் இசைத்தட்டில் கேட்ட சுப்புலட்சுமியின் பாட்டு அவர் தொண்டையிலிருந்து வெளிப்படத் தொடங்கியது.
சின்னப் பையன்களின் குரலினிமையுடன் பாடலின் இயல்பான இனிமையும் சேர்ந்திருந்தது. அந்த வழியாக பைக்கில் சென்ற ஒருவர் வாகனத்தை நிறுத்திவிட்டுப் பாடலைக் கேட்டிருக்கிறார். வீரப்பனின் பாடல் நின்றவுடன், ‘இன்னொரு முறை பாடப்பா’ என்று கேட்டார் பைக்கானந்தர்! இரண்டாவது முறை பாடலைக் கேட்டுவிட்டு அவர் வெறுமனே செல்லவில்லை.
பையனின் முகவரியைக் கேட்டுக்கொண்டு, மாரியம்மன் கோயிலுக்கு எதிரே இருந்த வீட்டுக்குப் போனார். நல்லா பாடற புள்ளைக்கு சங்கீதம் கத்துக்கொடுக்கச் சொல்லிவிட்டுச் சென்றார்!
வயக்காட்டைப் பார்த்துக்கொள்வதும் ஆடுமாடுகளை மேய்ப்பதுமாக இருந்த வீரப்பன், மாயவரம் ராஜகோபால் என்பவரிடம் சங்கீதம் பயின்றார். அதைப் பின்னாளில், ‘சாதாரணப் பாட்டு’ கத்துக்கிட்டேன் என்பார் வீரப்பன்.
புதுக்கோட்டையில் டி.கே.கிருஷ்ணசாமி, சின்னஞ்சிறார்களை வைத்து சக்தி நாடக சபை தொடங்கிய நேரம் அது. ராமாயண நாடகத்தில் ராமராகப் பாடி நடிக்கக்கூடிய பையனைத் தேடிக்கொண்டிருந்தார். புதுக்கோட்டையிலிருந்து ஆவணம் 25 மைல் தூரம். ஆனால் வயக்காட்டோரம் அழகாகப்பாடும் ஆவணம் பையனைப் பற்றிய செய்தி புதுக்கோட்டைக்குப் பரவிவிட்டது!
அம்மா அப்பாவிடம் சொல்லிக்கூப்பிட்டா, ‘‘நாங்க நாடகம், சினிமாவுக்கெல்லாம் பையனை அனுப்பமாட்டோம்’’ என்று, வள்ளியம்மைக்கும் சேர்த்து கூறிவிட்டார் அரியகுட்டித்தேவர்.
ஆனால், ‘நாலு பையங்கள்ள ஒருத்தன் இதுல இருக்கட்டுமே’’ என்று மாமா ராமநாத தேவரும் பழனியப்பச் செட்டியாரும் சிபாரிசு செய்தது பலன் அளித்தது.
சக்தி நாடக சபையின் முதல் நாடகத்தில் கதாநாயகன் ராமன் வேடம் வீரப்பனுக்கு கிடைத்தது. வீரப்பன் பாடக்கேட்டு பிரதான வேடத்திற்கு சிபாரிசு செய்தவர்கள் நாடக சபையில் அப்போது இருந்த எஸ்.வி.சுப்பையாவும் எம்.என்.நம்பியாரும். பாட்டும் நடிப்பும் மட்டும் இல்லை, தமிழும் பேச்சும் வீரப்பனுக்கு சொல்லிக் கொடுக்கப்பட்டது. அதற்கு வாத்தியார் எஸ். ஏ. கண்ணன்.
சிவாஜி என்று பிறகு புகழ் பெற்ற வி.சி.கணேசனும் சக்தி நாடக சபையில் வந்து சேர்ந்தார். கணேசனின் நடிப்பு வீரப்பனுக்கு முன் மாதிரியாக அமைந்தது. 'பராசக்தி' படத்தில் சிவாஜி நடித்துக் கொண்டிருந்த போது, ‘என் தங்கை’ நாடகத்தில் சிவாஜி நடித்த வேடத்தில் வீரப்பன் நடித்தார். படப்பிடிப்பு இல்லாத நாளில் நாடகம் பார்கக வந்த கணேசன், வீரப்பன் நடிப்பை பாராட்டினார்.
சென்னை ஒற்றை வாடை அரங்கில் சக்தி நாடக சபை 1947 ஆகஸ்டில் நாடகம் போட்ட போது, எம்.ஜி.ஆர் வந்து நாடகம் பார்த்தார். வீரப்பனுக்கு பாதாம் அல்வா வாங்கிக்கொடுத்து, அதை சாப்பிட்டுவிட்டு பாடச்சொன்னார். பாதாம் அல்வா குரலை இனிமையாக ஒலிக்கச் செய்ததை கண்டுகொண்டார் வீரப்பன்.
சக்தி நாடக சபையில் பத்து வருடம் இருந்த பிறகு, 1954ல் எஸ்.வி.சகஸ்ரநாமத்தின் சேவா ஸ்டேஜ் குழுவில் சேர்ந்தார் வீரப்பன். சேவா ஸ்டேஜுக்கு நாடகம் எழுதிய பி.எஸ்.ராமையா, தி. ஜானகிராமன் போன்ற இலக்கியவாதிகளின் தொடர்பு வீரப்பனுக்கு கிடைத்தது. தான் எழுதிய வசனங்களில் நடிகர்கள் கூட்டிக்குறைத்துப் பேசுவதை ஜானகிராமன் விரும்பமாட்டார். ஆனால் காட்சிக்கு ஏற்ப பேசிய வீரப்பனுக்கு மட்டும் அந்த விஷயத்தில் சலுகை அளித்திருந்தார் ஜானகிராமன்!
சேவா ஸ்டேஜ் கல்கத்தாவில் நாடகம் நடிக்கச் சென்ற போது, வங்காளி மொழி நாடகம் பார்க்க வீரப்பன் சென்றார். ஒரு நாடகம் 514வது நாளாக நடந்துகொண்டிருந்ததைப் பார்த்து அதிசயித்தார். திருப்தி மித்ரா என்ற பெண்மணி சிரித்துக்கொண்டே அழுத காட்சி வீரப்பனை அழவைத்தது. அப்படி ஒரு நடிப்பாற்றல் திருப்திக்கு.
அதே போல் கப் அண்ட் சாஸரில் ஒரு நடிகர் காபி குடித்த காட்சி. காபியில் மிதந்துகொண்டிருந்த எறும்பை ஸ்பூனில் எடுத்துபோட்டுவிட்டுக் காபியைக் குடித்தார் நடிகர். இதை 514வது தடவையாக இன்று செய்கிறார், இனியும் வரவிருக்கும் நாட்களிலும் செய்வார் என்று, கூட வந்த நண்பர் வீரப்பனிடம் தெரிவித்தார். பிறகு கல்கத்தாவிலிருந்து வீரப்பனுக்கு கடிதம் போட்ட அந்த நண்பர், அந்த நாடகம் ஆயிரமாவது முறையைக் கடந்து கொண்டிருக்கிறது என்றார்.
இதுபோன்ற அனுபவங்கள், வீரப்பனிடம் கலையின் மீது ஒரு அர்ப்பண உணர்வை வளர்த்துவிட்டன. ‘‘சாகும் வரை என் உழைப்பை கலைக்காகவும் கலையின் மூலம் மக்களைத் திருத்துவதற்காகவும் செலவிடுவது என்று நான் அந்த வங்காளி நாடகத்தைப் பார்த்து முடிவுசெய்துவிட்டேன்,’’ என்பார் வீரப்பன்.
‘மல்லியம் மங்கலம்’, ‘நாலு வேலி நிலம்’ முதலிய சேவா ஸ்டேஜ் நாடகங்கள் திரைவடிவம் பெற்றபோது, நாடகத்தில் ஏற்ற அதே வேடங்களை திரையிலும் செய்தார் வீரப்பன். 'நாலு வேலி நில'த்தில் நல்லவன் போல் நடித்துக் கெடுக்கும் அவருடைய வேடம் அமர்க்களமாக இருந்தது. இன்றும் டி.வி.டி.யில் மக்கள் பார்த்து ரசிக்கலாம்.
'பணத்தோட்ட'த்தில் நடிக்க வீரப்பனை எம்.ஜி.ஆர். அழைத்தார். வீரப்பன் நாகேஷையும் அழைத்துச் சென்று அறிமுகப் படுத்தினார். பின்னர் இருவருக்குமான சிரிப்புப் பகுதியை சிருஷ்டித்தார். வெறும் கோமாளித்தனமான இந்த ‘ஸ்லாப்ஸ்டிக்’ காமெடி, வரவேற்பை பெற்றது. இந்த வெற்றி, நாகேஷுக்கு எம்.ஜி.ஆருடனான ஒரு நீண்ட அத்தியாயத்தைத் தொடக்கி வைத்தது.
'படகோட்டி'யில் வீரப்பனும் நாகேஷும் நடித்த ஒரு காட்சியில் அவர்கள் இருவரும் படகில் இருந்தார்கள். நாகேஷ் தண்ணீரில் விழுவதுபோல் காட்சி அமைக்கப்பட்டிருந்தது.
அவர் விழுந்தவுடனே, ‘அடுத்த தலைவர் நான்தான்’ என்று வீரப்பன் ஒரு நொடியில் ஒரு சிரிப்பு வெடியைக் கொளுத்திப்போட்டார் (படத்தில், ‘நடமாடும் வலைவீசுவோர் சங்க’த்திற்கு நாகேஷ் தலைவர், வீரப்பன் செயலாளர்).
கரையிலிருந்து படப்பிடிப்பை கவனித்துக்கொண்டிருந்த எம்.ஜி.ஆர், வீரப்பன் சொன்னதைக் கேட்டு சத்தமாக சிரித்தார். கரைக்குப் படகு வந்தவுடன், ‘வீரப்பா, நாட்டில நடக்கற விஷயத்தை ஒரு டயலாக்கில சொல்லிட்டியே’ என்று கூறி, ஐயாயிரம் ரூபாய் கட்டை வீரப்பனுக்குப் பரிசாகக் கொடுத்தார்!
‘மெட்ராஸ் டூ பாண்டிச்சேரி’ செல்லும் பஸ்ஸில் கயவர்களிடமிருந்து தப்பி வரும் ஒரு பெண் (கல்பனா), ஏறுவதாக கதை அமைத்து, வசனம் எழுதினார் வீரப்பன். படம் வெற்றி அடைந்து, ‘பாம்பே டூ கோவா’ என்று இந்தியிலும் சக்கை போடு போட்டது.
அதே போல், ‘சாது மிரண்டால்’ படத்திற்கு கதை வசனம் எழுதினார் வீரப்பன். வங்கிக் காஷியராக இருக்கும் சாதுவான பசுபதி (டி.ஆர். ராமசந்திரன்), பால்ய நண்பனும் கொள்ளைக் காரனுமான நரசிம்மனை (ஓ.ஏ.கே. தேவர்) சந்திக்கும்போது விபரீதங்கள் நடக்கின்றன என்பது கதை. இந்தப் படமும் அதன் இந்திப் பதிப்பான 'சாது அவுர் சை'த்தானும் வெற்றி அடைந்தன.
ஆனால் இரண்டு படங்களின் வெற்றிக்கான பலன்கள் வீரப்பனுக்கு கிடைக்கவில்லை. ஏனென்றால், தான் கதை, வசனம் எழுதியிருந்தாலும் தன்னுடைய பெயரை வீரப்பன் போட்டுக் கொள்ளவில்லை!
மக்களுக்குத் தேவைப்படக்கூடிய கருத்துக்களை ஹாஸ்யமாக எப்படி அமைக்கலாம் என்ற சிந்தனையில் எப்பொழுதும் இருந்த வீரப்பனுக்கு, கடவுளைப் பற்றி எல்லாம் நினைக்க நேரம் இல்லை. ஆனால் கடவுளுக்கும் மனிதனுக்கும் உள்ள உறவை குறித்து 'ருத்ரதாண்டவம்' என்ற நாடகத்தில் அவர் எழுதினார். அது திரைப்படமாகவும் வந்தது. அதில் தேச ஒருமைப்பாடடின் அவசியத்தை மசால் வடையை முன் வைத்து அவர் எல்லோருக்கும் புரியும்படி சொன்னது மிகப்பெரிய வரவேற்பை பெற்றது.
கவுண்டமணிக்கும் செந்திலுக்கும் இடையேயான வீரப்பனின் வாழைப்பழக் காமெடி, 'கரகாட்டக்கார'னில் அமைந்தது. ஒரு வாழைப்பழத்தை தான் சாப்பிட்டு விட்டு, இரண்டு வாழைப்பழங்களுக்கு கணக்குச் சொல்லும் செந்திலின் ஏமாற்றுவேலை, பரவலாக ரசிக்கப்பட்டது. கங்கை அமரன் இயக்கிய படங்களில் உடன் இருந்து உதவினார் வீரப்பன்.
மதர்லேண்ட் பிக்சர்ஸ் எடுத்த ‘நான் பாடும் பாடல்’, ‘உன்னை நான் சந்தித்தேன்’, ‘உதய கீதம்’, ‘இதயக்கோயில்’ முதலிய படங்களில் கவுண்டமணிக்காக எழுதினார் வீரப்பன். ஆனால், இந்தத் தலையா அந்த தலையா என்று கவுண்டமணி பேசுவதும் செந்திலை உதைப்பதும் வீரப்பனின் கற்பனை அல்ல... கவுண்டமணியின் சொந்த சரக்கு.
‘கோயில் புறா’வில், தானும் உசிலை மணியும் பங்குபெற்ற ஒரு அருமையான ஹாஸ்ய பகுதியை உருவாக்கினார் வீரப்பன். 'சொல்லத்தான் நினைக்கிறேன்' படத்தில் வீரப்பனை ஒரு நல்ல பாத்திரத்தில் கே.பாலசந்தர் மிளிர வைத்தார்.
சிவாஜி நடித்த 'ரோஜாவின் ராஜா'விற்கு கதை, வசனம் எழுதிய வீரப்பன், 'தெய்வீக ராகங்கள்' என்ற படத்தை தானே திரைக்கதை, வசனம் எழுதி இயக்கவும் செய்தார்.
காசு சேர்க்கும் பழக்கம் இல்லாதவர் வீரப்பன். சினிமா உலக பந்தாக்கள் சிறுதும் இல்லாத எளிமையான மனிதராக வாழ்ந்தார். அறுபத்தி ஐந்து வயதில் அவருக்கு கண்பார்வை பாதிக்கப்பட்டது. அப்பொழுதும் அவரிடம் வந்து சினிமாக்காரர்கள் காமெடி டிராக் எழுதிக்கொண்டுபோனார்கள். தொடர்ந்து சினிமாவிற்காக உழைத்து கொண்டிருந்த வீரப்பனின் உழைப்புக்கு ஏற்ற கவுரவத்தையோ சன்மானத்தையோ திரை உலகத்தினர் அவருக்குத் தரவேயில்லை. அதைப் பற்றி வீரப்பனும் கவலைப்படவேயில்லை!
வீரப்பன் 30.8.2005ல் மறைந்த போது, அவரைப்போலவே பாய்ஸ் கம்பெனியில் சேர்ந்து சிரிப்பு நடிகராக வளர்ந்த பி.ஆர்.துரை, வீரப்பனுக்கு அஞ்சலி கூட்டம் நடத்தினார். அதில் வீரப்பனின் இளமைக்கால நண்பரான ஜெயகாந்தன், அவருடைய உன்னதமான பண்புகளைப் பாராடடிப்பேசினார். ஏ.வீரப்பன், தன் செயலாலும் சிந்தனையாலும் உழைப்பாலும் ஏ.ஒன்.வீரப்பன்தான்.
- வாமனன்
No comments:
Post a Comment