Saturday, July 21, 2018

AADI VELLI THEDI UNNAI - MOONRU MUDICHU



படம்: மூன்று முடிச்சு
பாடல்: கவியரசர் கண்ணதாசன்
இசை: எம்.எஸ்.வி
குரல்: ஜெயச்சந்திரன், வாணிஜெயராம்

ஆண்:
ஆடி வெள்ளி தேடி உன்னை
நானடைந்த நேரம்
கோடி இன்பம் நாடி வந்தேன்
காவிரியின் ஓரம்
பெண்:
ஓரக் கண்ணில் ஊறவைத்த
தேன் கவிதைச் சாரம்
ஓசையின்றிப் பேசுவது
ஆசை என்னும் வேதம்
ஆண்:
வேதம் சொல்லி மேளமிட்டு
மேடை கண்டு ஆடும்
மெத்தை கொண்டு தத்தை ஒன்று
வித்தைபல நாடும்
பெண்:
நாடும் உள்ளம் கூடும் எண்ணம்
பேசும் மொழி மெளனம்
ராகம் தன்னை மூடி வைத்த
வீணை அவள் சின்னம்
ஆண்:
சின்னம் மிக்க அன்னக்கிளி
வண்ணச் சிலைக் கோலம்
என்னை அவள் பின்னிக் கொள்ள
என்று வரும் காலம்!
பெண்:
காலம் இது காலம் என்று
காதல் தெய்வம் பாடும்
கங்கை நதி பொங்கும் - கடல்
சங்கமத்தில் கூடும்
சங்கமத்தில் கூடும்


நன்றி:

மூன்று முடிச்சு படம் பற்றி எழுத நிறைய விஷயங்கள் உள்ளது, இயக்குனர் கே.பாலச்சந்தர் இப்படத்திற்கு முன்னரும், இப்படத்திற்குப் பின்னரும் இயக்கிய ஏனைய படங்களுக்கும் இப்படத்திற்கும் நிறைய தொடர்புகள் பல முடிச்சுக்களாக உண்டு.


இப்படம் கே,விஸ்வநாத்தின் திரைப்படமான O Seeta Katha    வை  உரிமை வாங்கி தழுவி எடுக்கப்பட்டிருந்தாலும் [அதன் மூலக்கதை-கொல்லப்புடி மாருதிராவ்[ஹேராம் படத்தில் பெண் தரகன் கோவர்த்தன்] ,

மூன்று முடிச்சு படத்தின் மலையாள வடிவம் Mattoru Seetha ,இயக்கம் பி.பாஸ்கரன், 1975 ஆம் ஆண்டு வெளியான படத்தில் கமல் தமிழில் ரஜினி செய்த வில்லன் கதாபாத்திரத்தில் நடித்திருந்தார்.ஸ்ரீதேவி செய்த செல்வி கதாபாத்திரத்தில் மலையாளத்தில் ரோஜா ரமணி நடித்திருந்தார்.

தமிழில் இதன் திரைக்கதை வசனம் இயக்கத்தில் நிறைய புதுமைகளைப் புகுத்தியிருந்தார் இயக்குனர் கே.பாலச்சந்தர்.


இதில் ஆண்குரலுக்கு ஜெயச்சந்திரனே எல்லா பாடல்களையும் பாடியிருப்பார், ரஜினிக்கு எம்.எஸ்.விஸ்வநாதன் வசந்தகால நதிகளிலே பாடலின் முடிவில் குரல் கொடுத்திருப்பார், பின்னாளில் வந்த நினைத்தாலே இனிக்கும் படத்திலும் ரஜினிக்கு சிவசம்போ பாடலில் எம் எஸ்வியே பாடியிருப்பார், அதில் கமல் ரஜினியை மேடையில் அறிமுகம் செய்கையில் இவர் எம் எஸ்வி குரலில் பாடுவார் என சொல்லுவார்.


இப்படத்தில் கமல் வசிக்கும் மொட்டைமாடியும் அதன் கட்டிடமும் அவரின் எல்டாம்ஸ் ரோடில் இருக்கும் அவரது சொந்தவீடே ஆகும். அதற்கு டைட்டில் கார்டில் திருமதி. ராஜலட்சுமி ஸ்ரீநிவாசனுக்கு [அவரின் அம்மா] நன்றி சொல்வார்கள்.

அதே போல கமல் பணிபுரியும் விஜிபி பன்னீர்தாஸ் அண்ட் கோ ஷோரும் அண்ணாசாலை கிளைக்கும், அவர் யேசுதாஸ் எல்.பி.ரெகார்டுகளை விற்பனை செய்யும் கிருஷ்ணன் & கிருஷ்ணன் கடைக்கும் நன்றி சொல்லியிருப்பார்கள்,


இப்படத்துக்கும் பி.எஸ்.லோகநாத் தான் ஒளிப்பதிவு,அவருக்கு உதவியாளராக ரகுநாதரெட்டி பணியாற்றியிருப்பார்,இப்படத்தின் உதவி இயக்குனர்கள் அமீர்ஜான் மற்றும் கண்மணி சுப்பு. படத்தின் உணர்ச்சிகரமான பாடல்களை கவிஞர் கண்ணதாசன் எழுதியிருப்பார்.

கவிஞர் கண்ணதாசன்,எம் எஸ்வி,மற்றும் பாலச்சந்தர் மூவர் இணைகையில் நமக்கு காலத்தால் அழியாப் பாடல்கள் கிடைக்கும், அப்படி கிடைத்த முத்துக்கள் மூன்று,அவை ஆடிவெள்ளி தேடி உன்னை மற்றும் வசந்தகால நதிகளிலே என்னும் அந்தாதி வடிவில் அமைந்த பாடல்களும் அடக்கம்,நான் ஒரு கதாநாயகியும் சூழலைச் பூடகமாகச் சொல்லும் பாடல்.


இப்படத்தில் அவசரமின்றி 15 நிமிடங்கள் கடந்த பின்னே பெயர் போடுவார்கள். கமல்ஹாசன் கௌரவ வேடம் என்றாலும் அவருக்கு இந்த டூயட்டும், வசந்தகால நதிகளிலே என்னும் ட்ரையோ பாடலும் உண்டு, தவிர அவரின் பெயர் தான் முதலில் வரும்.அதன் பின்னர் ஸ்ரீதேவியின் பெயர்,அதன் பின்னரே ரஜினியின் பெயர் வரும்.இதில் ரஜினி கீழ் வீட்டில் குடியிருக்கும் கேரளப் பணிப்பெண்ணை [அனுபமா] ஸ்ரீதேவி மீதிருக்கும் விரக வெறியைத் தணிக்க பயன் படுத்திவிட்டு தூக்கி எறிவார்,


அவருக்கு அந்த உறவின் மூலம் குழந்தையும் பிறந்து விடும்,அதை வளர்க்க அவர் அக்குழந்தையை ஒரு மலையாள படத்தின் படப்பிடிப்பில் வாடகைக்கு விட்டு சம்பாதிப்பதையும் பார்ப்போம், இதே போலவே இயக்குனரின் ஒருவீடு இருவாசல் படத்திலும் நாயகி தன் துணைநடிகர் ஏஜெண்டான நண்பன் லிவிங்ஸ்டனுக்கு உதவ எண்ணி தன் மகனை ஒரு இந்திப் படத்தின் சண்டைக்காட்சிக்கு நடிக்க அனுப்புவார். எங்கெல்லாம் வாய்ப்பு கிடைக்கிறதோ அங்கெல்லாம் தன் முந்தைய படைப்புக்கு அங்கங்கே மேம்படுத்தி ட்ரிப்யூட் செய்து பார்ப்பவர் இயக்குனர் பாலச்சந்தர்.
இப்படத்தில் நடிக்க கமல்ஹாசனுக்கு 30ஆயிரம் ரூபாயும்,ஸ்ரீதேவி அப்போது தான் அறிமுகம் என்றாலும் குழந்தை நட்சத்திரமாக மக்கள் மனதில் பதிந்த நடிகை என்பதால் 5 ஆயிரம் சம்பளமும் ரஜினிக்கு 2ஆயிரம் சம்பளமும் பேசியிருந்தார்கள் என ஸ்ரீதேவி நீங்களும் வெல்லலாம் ஒரு கோடி தொலைக்காட்சி நிகழ்ச்சியில் சொல்லியிருந்தார். ரஜினிக்கும் கமல் போல நிருபனமான நடிகராகி அந்த 30 ஆயிரம் ரூபாய் சம்பளம் வாங்க வேண்டும் என்பதே அன்றைய குறிக்கோளாக இருந்தததாகவும்,அதை அவர் வெளிப்படையாக ஸ்ரீதேவியிடமும் அவர் அம்மாவிடமும் சொன்னதாகவும் சொல்லியிருந்தார் . மாற்றம் ஒன்று தான் உலகில் மாறாதது?!!!.இதோ அந்த நிகழ்ச்சியின் சுட்டி http://www.youtube.com/watch?v=QOfI25M2OJk 13.50 நிமிடத்தில் பாருங்கள்.


எல்லா கருப்பு வெள்ளை படங்களிலுமே ரஜினிக்கு மேக்கப்பை மாவு போல அப்பி வைத்து விடுவார்கள்.இதுவும் விதிவிலக்கல்ல.இதில் ரஜினிக்கு மனசாட்சியாக அவரது நண்பர் இயக்குனர் நட்ராஜையே பைத்தியக்காரன் வேடமிட்டு அவ்வப்போது தோன்றவைத்து ரஜினிக்கு[ஆணாதிக்கத்துக்கு] திருந்த புத்திமதி சொல்லியிருப்பார் இயக்குனர்.

நட்ராஜ் அப்படி முக்கியமான மூன்று காட்சிகளின் போது போடும் மூன்று முடிச்சும் படத்தின் பெயரை பிரதிபலிக்கும்.பெயர் போடுகையில் ரஜினி,கமல்,ஸ்ரீதேவி மூவருக்கும் மூன்று முடிச்சு என்று போட்டு அங்கே இயக்குனர் பெயரை ஒருவர் பார்க்கையில் கண்டிப்பாக க்ளாப்ஸ் எழுந்து ஓய்ந்திருக்கும்.மிக ரசனையான இடம் அது.

படத்தின் முதல் காட்சியே பாலச்சந்தரின் அரங்கேற்றம் படத்தின் பிரமீளா சிவகுமாரின் புரட்சித் திருமணத்தை செந்தாமரை நடத்திவைக்கும் காட்சியில் தான் துவங்கும்,புதுமையாக படத்தின் மையக் கதாபாத்திரங்களை அங்கேயே வைத்து அவர்கள் திரையரங்கில் படம் பார்க்கையிலேயே நமக்கு அறிமுகம் செய்து விடுவார் இயக்குனர்,

படம் விட்டு வீட்டுக்குச் சென்றதும் சிவகுமார் பிரமீளாவை ஏற்றுக் கொண்டதை வரவேற்றுப் பேசும் கமலும்,அதை பைத்தியக்காரத்தனம் என்று பேசும் ரஜினியும் தர்க்கம் செய்கையிலேயே அவர்களின் குணாதிசயத்தை நமக்கு விளக்கியும் விடுவார்.

அங்கே பிரட் ஜாமை இருவரும் பகிர்ந்து உண்ணும் காட்சியில் ரஜினி கமலைப் பார்த்து இதமாக “பாலாஜி,நீயும் நானும் எதை வேண்டுமானாலும் பகிர்ந்து கொள்ளலாம்,ஆனால் அபிப்பிராயங்களை பகிர்ந்து கொள்ள வேண்டும் என்ற கட்டாயம் இல்லை என்பார்,அது போல பல ப்ரில்லியண்டான வசங்கள் படம் நெடுக உண்டு. அதே போன்றே ஸ்ரீதேவிக்கும் அவரின் அக்காவான ஒய்.விஜயாவும் அரங்கேற்றம் லலிதா பற்றி கருத்து சொல்கையிலேயே அவர்களின் ஏழ்மைச் சூழலையும்,அடித்தட்டு மக்களின் மனநிலையையும் விளக்கிவிடுவார்.

இதில் ரஜினியின் அப்பாவாக நடித்த என்.விஸ்வநாத் என்ற கல்கத்தா விஸ்வநாதன் மிக அருமையான நடிகர்.அவர் மிருணாள் சென் மற்றும் சத்யஜித் ரே படங்களில் தொடர்ந்து நடித்து தன் பெயரை நிலைநாட்டியவர். இதில் 47 வயதில் 18 வயதுப் பெண்ணை இரண்டாம் தாரமாக மணக்கும் சிக்கல் மிகுந்த கதாபாத்திரத்தை எத்தனை அனாயசமாக செய்திருப்பார் பாருங்கள், அதிலும் தன் இரண்டாம் திருமணம் முடிந்து தன் முன்னால் நின்று கொண்டிருக்கும் மகனிடம் மெல்ல தயக்கத்தை விட்டு அசடு வழியப் பேசத் துவங்கும் காட்சிகளில் மனிதர் கொன்றிருப்பார்.

அப்போது சமூகத்திலிருந்த அதிகம் குழந்தை பெறுதல்,அதனால் அல்லலுறுதல்,சமமில்லா ஆண்-பெண் பிறப்பு விகிதாச்சாரத்தால் ,சர்வ சாதாரணமாக நடைபெற்ற இரு தார விவாகம்,பெண்ணைக் கிள்ளுக்கீரையாக நினைத்து செய்த எண்ணிலா அடக்குமுறைகள் சர்வ சாதாரணமானது. சமூகத்தில் பெண் தன் திருமணச் செலவுக்கு பொன்னும் பொருளும் சேர்த்துவைக்க வேண்டிய துர்பாக்கிய நிலையை இப்படத்தில்  மிக அருமையாக சாடி காட்சிப் படுத்தியிருப்பார் இயக்குனர், 

அப்படி மிகுந்த ஏழ்மை நிர்கதி நிலையில் இருக்கும் ஸ்ரீதேவி. தன்னை விட 30 வயது மூத்தவரான விஸ்வநாத்தை திருமணம் செய்து கொள்ளத் துணியும் இடங்கள் நம்பும் படியாக காட்சிப்படுத்தப்பட்டிருக்கும். விஸ்வநாத்தின்   வயதான நண்பராக வரும் திருட்டு தம் எம்.ஆர்.ராஜாமணி மிக இயல்பாக  நகைச்சுவையாக நடித்திருப்பார் .அவர் ஒரு பழம்பெரும் நாடக நடிகரும் கூட.அவர் அடிக்கடி உச்சரிக்கும் பைத்தக்காரா மிக அழகாக இருகும். விஸ்வநாத் ஸ்ரீதேவியை மணக்க சம்மதிக்க கூச்சப்படுவதால் அதை குறிப்பால் உணர்த்த  ஃப்ளவர் வாஸில் ஒற்றை பூவை சொருகி வை என்று யோசனை சொல்லும் இடங்களும்,அன்று காலை அந்த ஃப்ளவர் வாஸ் எண்ணிலடங்கா பூக்களால் நிரம்பி வழியும் இடங்கள்  எல்லாம் அருமையானவை.

இரு பாடல்களில் பெண் குரலுக்கு வாணி ஜெயராம் பாடி அசத்தியிருப்பார். கவிஞர், எம் எஸ்வி, பாலச்சந்தர் மூவர் சேர்ந்தாலே அங்கே வாணியம்மாவைப் பாட வைத்து விடுவார்கள்,அப்படி பிறந்த அருமையான பாடல்கள் ஒன்றா இரண்டா?!!!

அபூர்வராகங்களில் வரும் கேள்வியின் நாயகனே பாடல் அப்படி ஒரு ஒப்பற்ற பாடலாகும்,அதே போன்றே இப்படத்தில் வாணியம்மாவுக்கு அமைந்த பாடல் தான் இந்த வசந்தகால நதிகளிலே மற்றும்,ஆடிவெள்ளி,பாடலும்.

எல் ஆர் ஈஸ்வரிக்கு நான் ஒரு கதாநாயகி என்னும் ஒரு பாடல் உண்டு. ரஜினிக்கு அப்போதைய அநேகம் படங்களில் டூயட்டோ அவரை விரும்பும் நாயகியோ வைக்காமல் ஏமாற்றி விடுவார்கள்.இதுவும் விதிவிலக்கல்ல.

இதில் யேசுதாஸ் ஒரு பாடலும் பாடாவிட்டாலும் ஸ்ரீதேவி அவரின் ரசிகை, கமல் விஜிபி அண்ட் கோவில் யேசுதாஸின் எல்பி ரெகார்ட்களை விற்கும் சேல்ஸ்மேன், அங்கே பாடல் கேட்க அடிக்கடி வரும் ஸ்ரீதேவிக்கும் அவருக்கும் வரும் இயல்பான காதல் மிக அருமையாக சொல்லப்பட்டிருக்கும்.தவிர படத்தில் யேசுதாஸ் அவர்கள் நேரடியாக பாடவில்லையே தவிர அவரின் மனைவி அமைவதெல்லாம் பாடல் படத்தின் ஒரு முக்கியமான காதல் காட்சியில் நகைச்சுவையாகவும் பயன்படுத்தப்பட்டிருக்கும். 

அதே போல மலரே குறிஞ்சி மலரே பாடலும்,ஊருக்கும் வெட்கமில்லை பாடலும்,நல்ல மனம் வாழ்க பாடலும் கமல் ஸ்ரீதேவி சந்திக்கும் அறிமுகக் காட்சியில் ஒலிக்கும்,ஒரு ஒப்பற்ற கலைஞனுக்கு மிக அருமையான மரியாதை அவை,

பாலச்சந்தர் பிறரின் படைப்புகளை சிலாகித்து அவற்றை அழகாக மரியாதை செய்யும் கலையைப் பயின்ற ஒரு இயக்குனர். இப்படத்தில் கமல் ஸ்ரீதேவியை மிஸ் ஜேசுதாஸ் என்றே ஆரம்பக் காட்சிகளில் கூப்பிடுவார்,அந்த அளவுக்கு யேசுதாஸை சிலாகித்தவர் பாலச்சந்தர்.பின்னாளில் சிந்து பைரவி அடத்தில் அவருக்கு எல்லா பாடல்களையும் தந்து பாட வைத்தவர் ,ஒய்.விஜயா பாலச்சந்தரின் ஃப்ரீக்வண்ட் கொலாப்ரேடர், அவருக்கு இதில் மிக அருமையான துணை நடிகை கதாபாத்திரம் தந்து கௌரவித்திருப்பார்,

அழகும் திறமையும் மிகுந்த துணைநடிகைகள் சினிமாவில் அல்லல்படுவதை அலைக்கழிக்கப்படுவதை வாய்ப்பு கிடைக்கும் போதெல்லாம் பதிவு செய்தவர் பாலச்சந்தர்,இதில் ஒய்.விஜயாவுக்கு கதாநாயகிக்கு டூப் போடுகையில் நிகழ்ந்த தீவிபத்தில் இவர் முகம் சிதிலமடைந்துவிடும்,அதன் பின்பு அவருக்கு ஏனைய காட்சிகளில் முகமே காட்டாமல் நிழலையும்,  முக்காடிட்டும், கால்களையும், முதுகையும் காட்டி ,வெறும் வசனம் மட்டும் பேச வைத்தும் படமாக்கியிருப்பார் [இருகோடுகள் படத்தில் அண்ணாதுரைக்கும் இதே போல வசனம் மட்டும் உண்டு], இது போன்ற பலப்பல பரீட்சார்த்த முயற்சிகள். இப்படத்திலும் உண்டு.

ஹிட்ச் காக் ஒரு படத்தில் துப்பாக்கிக்கு க்ளோஸப் போட்டால் அது பின்னொரு காட்சியில் வெடித்தே தீரும் என்று சொல்லியிருக்கிறார்.அது எழுதப்படாத விதி. இதே போன்றே படத்தின் ஆரம்பக்  காட்சியில் துணை நடிகை ஒய்.விஜயா தூக்கு மாட்டி சாக வேண்டிய கதாநாயகிக்காக டூப் போட்டு தூக்குக் கயிற்றில் தொங்க,அது அறுந்து விடுகிறது,

அங்கே உதவி இயக்குனர் ஏம்மா ஒழுங்காக தூக்கில் தொங்கக்கூடாதா?என்கிறார், அவர் முன்ன பின்ன தொங்கி பழக்கமில்லை சார் என்கிறார்.படத்தின் முக்கியமான திருப்பத்திற்காக இதே ஒய்.விஜயா தூக்கில் நிஜமாக தொங்க வேண்டி வரும், அக்காட்சியில் மிகவும் கண்ணியமாக அவரை சிம்பாலிக்காக ஒரு பொம்மை கயிற்றில் ஊசலாடுவது போலக் காட்டியிருப்பார் இயக்குனர். 

இதே போன்றே ஒரு வீடு இருவாசலில் துணைநடிகை யாமினியை மிக அழகியாகவும் ,புத்திசாலியாகவும் சித்தரித்திருந்தார்,அவர் துணைநடிகையாக நடிக்கும் ஒரு படத்தின் இடைவேளையில் ஒரு பெரிய ஆலமரத்தடியில் அமர்ந்து அவர் சுந்தரராமசாமியின் ஒரு புளியமரத்தின் கதை புத்தகத்தைப் படிப்பார்.அது மிக ப்ரில்லியண்டான காட்சி. ஒய்.விஜயாவின் நீட்சியாகவே ஒரு வீடு இரு வாசலில் யாமினி என்னும் துணை நடிகை கதாபாத்திரத்தைப் படைத்திருப்பார்.
மரோ சரித்ராவை தொடர்ந்து இப்படத்திலும் நாயகன் நாயகி சந்திக்கையிலும் கடிகாரங்கள் மணி அடிக்கத்துவங்கும், அதே போலவே இதிலும் போட்டியிட்டு துணி துவைக்கும் காட்சியும் உண்டு. அதே போன்றே இதிலும் காதலன் முதுகில் காதலி தன் காதலை வார்த்தைகளாக எழுதும் காட்சியும் உண்டு.அதிலும் பிரசாத் மனம் புழுங்கட்டும் என்று ஸ்ரீதேவி கமல் முதுகில் எழுதியதை [ரஜினி] பிரசாத்தே படித்து புழுங்கும் இடம் எல்லாம் மாஸ்டர்பீஸின் இலக்கணம்.

இதில் நாயகிகளை சரிதா,ஸ்ரீதேவி,ரத்தி என மாற்றி மாற்றி போட்டு காட்சிப்படுத்தினாலும் நாயகன் கமல் ஒருவரே.அதே போன்றே மூன்று முடிச்சு படத்தில் வரும் வேலைக்காரி கதாபாத்திரத்தின் நீட்சியே ஒரு வீடு இரு வாசல் படத்தின் முதல் வாசலில் வரும் நடிகை சூர்யா நடித்த வேலைக்காரி கதாபாத்திரம்.மூன்று முடிச்சு படத்திலும் தன் திருமணத்துக்கு காசு சேர்க்க கவுரவமாக வீட்டு வேலை செய்து பிழைக்கும் அனுபமா ரஜினியால் பெண்டாளப்பட்டு கர்ப்பமடைவார்,அக்குழந்தை நிராதரவாக தவிக்கும். அதே போன்றே ஒரு வீடு ஒருவாசல் படத்திலும் தன் திருமணத்துக்கு காசு சேர்க்க கவுரவமாக வீட்டு வேலையும் பசு மாடும் வைத்து பால் கறந்து  தந்து பிழைக்கும் சூர்யா -நாயகன் கணேஷால் பெண்டாளப்பட்டு கர்ப்பமடைவார்,அக்குழந்தையும் நிராதரவாக தவிக்கும்.


கடைசியாக வரும் கவிஞரின் சமூக நீதி வரிகள்

 மிக அருமையான வித்தியாசமான படம்.இன்னும் நிறைய விஷயங்கள் உண்டு அவற்றை நினைவுபடுத்தி தவறவிடாமல் எழுத வேண்டும்,இதில் கமலை விட சிவச்சந்திரன் அழகாக போட்டோஜெனிக்காக இருப்பார்.  ஒரே ஒரு பட்டிமன்றக் காட்சியில் மட்டும் வருவார்,அவர் தான் ஆடி வெள்ளி தேடி உன்னை நானடைந்த நேரம் கோடி இன்பம் நாடி வந்தேன் காவிரியின் ஓரம் என்று வார்த்தை விளையாட்டில் முடிப்பார், அங்கே கமல்ஹாசன் ஸ்ரீதேவியைக் காணவர, இந்த அந்தாதி வடிவான கனவுபாடல் முழுமை பெறும்.

கமலை ரஜினி வில்லத்தனம் நிறைந்த தன் இயல்பான நடிப்பில் தூக்கி சாப்பிட்டால், அவரை ஸ்ரீதேவி விழுங்கியேயிருப்பார்.தமிழ் சினிமாவின் பொற்காலத்தில் நிகழ்ந்த படம் இது.

இந்த க்ளாஸிக் படத்தின் பெயரையும் நவீன சினிமா மற்றும் சின்னத்திரையில் நாறடிப்பது நிகழ்கிறது,கூகுளில் இப்படத்தைப் பற்றி தேடினால் சாக்கடை போல ஒரு டப்பிங் நாடகம் பற்றிய தகவல்கள் தான் முந்தி வருகிறது.இதனால் நான் க்ளாஸிக் படங்களின் பெயரை மறு உபயோகம் செய்வதை தடை செய்ய வேண்டும் என்று சொல்லி வருகிறேன்.
முழுப்படமும் யூட்யூபில் கிடைக்கிறது.


Friday, July 13, 2018

VASANTHA KALA NADHIGALILE - MOONRU MUDICHU



அந்தம் - முடிவு, ஆதி - ஆரம்பம்.. முடிவிலே ஆரம்பிப்பது அந்தாதி.

பூத்தவளே புவனம் பதினான்கையும் பூத்தவண்ணம்
காத்தவளே பின் கரந்தவளே கறைகண்டனுக்கு
மூத்தவளே என்றும் மூவா முகுந்தற்கு இளையவளே
மாத்தவளே உன்னை அன்றி மற்றோர் தெய்வம் வந்திப்பதே..

அபிராமி அந்தாதி 13 வது பாடல்.. அடுத்த பாடல் வந்திப்பவர் என்று தொடங்கும்..

வந்திப்பவர் உன்னை வானவர் தானவர் ஆனவர்கள்
சிந்திப்பவர் நல்திசைமுகர் நாரணர் சிந்தையுள்ளே
பந்திப்பவர் அழியாப் பரமானந்தர் பாரில் உன்னைச்
சந்திப்பவர்க்கு எளிதாம் எம்பிராட்டி நின் தண்ணளியே

இது போல கண்ணதாசன் சில பாடல்களை எழுதியுள்ளார்.

வசந்த கால நதிகளிலே
வைரமணி நீரலைகள்

நீரலைகள் மீதினிலே
நெஞ்சிரண்டின் நினைவலைகள்..

கேட்டு ரசியுங்கள்..


படம்: மூன்று முடிச்சு
இசை: எம்.எஸ்.வி
குரல்: ஜெயச்சந்திரன், வாணி ஜெயராம், எம்.எஸ்.வி
பாடல்: கண்ணதாசன்

வசந்த கால நதிகளிலே
வைரமணி நீரலைகள்
நீரலைகள் மீதினிலே
நெஞ்சிரண்டின் நினைவலைகள்

நினைவலைகள் தொடர்ந்து வந்தால்
நேரமெல்லாம் கனவலைகள்
கனவலைகள் வளர்வதற்கு
காமனவன் மலர்க்கணைகள்

மலர்க்கணைகள் பாய்ந்து விட்டால்
மடியிரண்டும் பஞ்சணைகள்
பஞ்சணையில் பள்ளி கொண்டால்
மனமிரண்டும் தலையணைகள்

வசந்த கால நதிகளிலே
வைரமணி நீரலைகள்
நீரலைகள் மீதினிலே
நெஞ்சிரண்டின் நினைவலைகள்

தலையணையில் முகம் புதைத்து
சரசமிடும் புதுக் கலைகள்
புதுக் கலைகள் பெறுவதற்கு
பூமாலை மணவினைகள்


மணவினைகள் யாருடனோ
மாயவனின் விதிவகைகள்
விதிவகையை முடிவு செய்யும்
வசந்தகால நீரலைகள்