Sunday, November 20, 2022

KATTODU KUZHAL AADA AADA - PERIYA IDATHU PENN

படம்: பெரிய இடதுப்பெண் 

பாடல்: கட்டோடு குழலாட ஆட 

குரல்: சுசீலா, LR ஈஸ்வரி, TMS 

இசை: விஸ்வநாதன் ராமமூர்த்தி 

கட்டோடு குழல் ஆட ஆட கண் என்ற மீன் ஆட ஆட பொட்டோடு நகை ஆட ஆட கொண்டாடும் மயிலே ஆடு
கட்டோடு ... பாவாடை காத்தோடு ஆட ஆட பருவங்கள் பந்தாட ஆட ஆட காலோடு கால் பின்னி ஆட ஆட கள்ளுண்ட வண்டாக ஆடு
கட்டோடு .... முதிராத நெல் ஆட ஆட முளைக்காத சொல் ஆட ஆட உதிராத மலர் ஆட ஆட சதிர்ஆடு தமிழே நீ ஆடு
கட்டோடு ... தென்னை மரத் தோப்பாக
தேவாரப் பாட்டாக புன்னை மரம் பூச்சொரிய சின்னவளே நீ ஆடு கண்டாங்கி முன் ஆட
கன்னி மனம் பின் ஆட கண்டு கண்டு நான் ஆட செண்டாக நீ ஆடு
கட்டோடு .... பச்சரிசி பல் ஆட
பம்பரத்து நாவாட மச்சானின் மனமாட
வட்டமிட்டு நீ ஆடு வள்ளி மனம் நீராட
தில்லை மனம் போராட ரெண்டு பக்கம் நான் ஆட சொந்தமே நீ ஆடு
கட்டோடு .....


"கட்டோடு குழல் ஆட" காலத்தை வென்ற அழகான பாடல்..!
எவருக்கும் தெரியாமல் தமிழன்னை பார்த்துக் கொண்டிருந்தாள் கண்ணதாசனை !
அந்த விசாலமான அறையின் ஒரு ஓரமாக அமர்ந்திருந்தாள் அவள்.
எம்.எஸ்.விஸ்வநாதனும் கண்ணதாசனை பார்த்துக் கொண்டிருந்தார்.
'பெரிய இடத்துப் பெண்' படத்திற்கான பாடல் எழுதும் வேளை அது.
இயற்கை எழில் கொஞ்சும் ஆற்றங்கரையில், இரு இளம் பெண்களோடு இணைந்து ஆடிப்பாடி வருகிறார் எம்ஜிஆர்.
இதுதான் காட்சியமைப்பு.
கண்ணதாசன் கண்களை மூடியபடி சிந்தித்துக் கொண்டிருந்தார்.
அவர் கண்களுக்குள்
தேவாரம், திருவாசகம்,
சிலப்பதிகாரம், மணிமேகலை, குண்டலகேசி, வளையாபதி, சீவக சிந்தாமணி, கம்ப ராமாயணம், திருக்குறள்... அத்தனையும் ஓடி வந்து அழகாக நடனம் ஆடின.
எதை எடுப்பது, எதை விடுப்பது ? எதுவும் புரியவில்லை கண்ணதாசனுக்கு.
கண் திறந்து பார்த்தார் கண்ணதாசன். அந்த அறைக்குள் அமர்ந்திருந்து,
தன்னையே இடைவிடாமல் உற்று நோக்கிக் கொண்டிருக்கும் தமிழன்னையின் தரிசனத்தை கண்டு கொண்டார்.
கண் மூடி, கை கூப்பி வணங்கினார் தமிழன்னையை !
"தாயே, தமிழே ! நான் படித்த ஆயிரக்கணக்கான இலக்கியங்களில், இந்த இடத்துக்கு பொருத்தமான வரிகள் எவை தாயே ?
எடுத்துச் சொல் அன்னையே,
வேண்டிக் கொள்கிறேன் உன்னையே !"
புன்னகைத்தாள் தமிழன்னை!
பொருத்தமான வரிகளை பொங்கி வரச் செய்தாள் கண்ணதாசன் உள்ளத்தில் !
மாணிக்க வாசகர் எழுதிய வரிகள், கண்ணதாசன் மனதுக்குள் வந்து ஆடின.
மாணிக்கவாசகர் மதுரை வீதியில் நடந்து போய்க் கொண்டு இருக்கிறார். அங்கங்கே பெண்கள் மர நிழல்களில், முற்றங்களில், ஊஞ்சல்களில், அமர்ந்த வாறும், நின்றவாறும் பாடிக் கொண்டு இருக்கிறார்கள்.
அங்கே சில மங்கையர் வண்ணக் கோலப் பொடி இடிக்கிறார்கள். அப்படி தாள லயத்தோடு உலக்கையை
இடிக்கும்போது அவர்கள் பாடும் பாடல் இது :
"முத்தணி கொங்கைகள் ஆட ஆட
மொய்குழல் வண்டினம் ஆட ஆடச்
சித்தஞ் சிவனொடும் ஆட ஆடச்
செங்கயற் கண்பனி ஆட ஆடப்
பித்தெம் பிரானொடும் ஆட ஆடப்
பிறவி பிறரொடும் ஆட ஆட
அத்தன் கருணை யொ டாட ஆட
ஆடப் பொற் சுண்ணம் இடித்து நாமே"
ஆஹா, ஆஹா !
தேனினும் இனிய இந்த தித்திக்கும் தமிழை தேடி எடுத்து தனக்குத் தந்த தமிழன்னையை நோக்கி மகிழ்வுடன் புன்னகை செய்தார், கரம் கூப்பி வணங்கினார் கண்ணதாசன்.
அப்புறம் என்ன ?
எம்.எஸ்.விஸ்வநாதனை நோக்கி சொன்னார் கண்ணதாசன். "விச்சு, இது சரியா இருக்குமா பாரு."
"சொல்லுங்க கவிஞரே!"
"கட்டோடு குழலாட ஆட ஆட
கண்ணென்ற மீனாட ஆட ஆட
கொத்தோடு நகையாட ஆட ஆட
கொண்டாடும் மயிலே நீ ஆடு!"
"ஆஹா" என்றார் எம்.எஸ்.வி.
கண்ணதாசன் தொடர்ந்தார் :
"பாவாடை காற்றோடு ஆட ஆட
பருவங்கள் பந்தாட ஆட ஆட
காலோடு கால்பின்னி ஆட ஆட
கள்ளுண்ட வண்டாக நீ ஆடு!"
பொங்கி வரும் பூரிப்பில் கண்ணதாசனை கட்டி அணைத்துக் கொண்டார் எம்.எஸ்.வி.
காலத்தை வெல்லப் போகும் ஒரு பாடல் அந்த அறைக்குள் கொஞ்சம் கொஞ்சமாக உருவாகிக் கொண்டிருக்க,
வந்த தன் வேலை முடிந்ததென எவருக்கும் தெரியாமல் அங்கிருந்து எழுந்து சென்றாள் தமிழன்னை.
அவள் சென்ற திசை நோக்கி கை கூப்பி தொழுதார் கண்ணதாசன் :
“வட்டிக் கணக்கே
வாழ்வென் றமைந்திருந்த
செட்டி மகனுக்கும்
சீர்கொடுத்த சீமாட்டி!
தோண்டுகின்ற போதெல்லாம்
சுரக்கின்ற செந்தமிழே
வேண்டுகின்ற போதெல்லாம்
விளைகின்ற நித்திலமே
உன்னைத் தவிர
உலகில்எனைக் காக்க
பொன்னோ பொருளோ
போற்றிவைக்க வில்லையம்மா!
என்னைக் கரையேற்று
ஏழை வணங்குகின்றேன்!”
நானும் வணங்குகின்றேன்
கண்ணதாசனை !
தமிழ்த்தாயின் தனிப் பெரும் தவப் புதல்வனை !
இணையத்தில் படித்த
அருமையான
பதிவு!
"பெரிய இடத்து பெண்" படத்தில் மெல்லிசை மன்னர்கள் எம். எஸ். வி... ராமமூர்த்தி அவர்கள் இசையில், சுசீலா அம்மாவும், ஈஸ்வரி அம்மாவும், டி. எம். எஸ் அவர்களும் மிக
இனிமையாக
பாடியிருக்கும் இந்த பாடல், பாடலின் ஆரம்பத்தில் வரும் புல்லாங்குழல் இசையுடன் ஆஹா! அருமை!